Tuesday, June 13, 2017


          டிஸ்லெக்சியா

         கற்றலில் புதிய பரிமாணம்

மனித வாழ்வு பல்வேறு பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது. சாதகமும் பாதகமும் கலந்தே இருப்பினும் பல நிலைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வாழ்வின் தரத்தை உயர்த்தியுள்ளது. மறுக்க முடியாது தான். ஆனால் கல்வியும் திட்டங்களும் இன்னும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் விதமாகவே இருக்கிறது. அதே டீச்சர், கரும்பலகைக்கு பதிலாக வெள்ளைப் பலகையும் மார்க்கரும், இன்னும் சில பள்ளிகளில் “ஸ்மார்ட் போர்டு” பேரைச் சொல்லி ஒரு ஐம்பதாயிரம் கொள்ளையும், ஆண்டு விழாக்களில் பள்ளியோடு இணைந்து பணியாற்றும் ஒரு நாங்கு பக்க அமைப்புகளுக்கு(speaking, writing, smart board, life skills, counselor, NEET coaching, JEE coaching) நன்றி பாரட்டியும், அப்போது ஆசிரியரின் வேலை தான் என்ன?! என்று நம்மைக் குழப்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மருத்துவம், பொறியியல், சமீபாமாக “சிஏ” இவற்றைத் தவிற வேறு எதுவும் சோறு போடாது. மகிழ்ச்சி.

பந்தயத்தில் குதிரைக்குக் கூட எதை நோக்கி ஓடுகிறோம் என்று தெரியும். நம் பள்ளி குதிரைகளுக்கு அதுவும் தெரியாது. சற்று நின்று பார்த்தால், மகா ஓரத்தில் ஒருவன் ஓடவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் தினறுவான். நிஜத்தில் அவன் தறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கும். நம் அனைவருக்குமே நம்மோடு படித்தவருள் “மக்கு” என கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தப்பட்டு ஓரங்கட்டப் பட்டவரை நினைவிருக்கும், ஏன் அந்த ஒருவர் நாமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் ஏன் என்று யோசித்திருக்க மாட்டோம் அதுதான் நம் பாட திட்டத்திலேயே இல்லையே.

“கற்றல் குறைபாடு (learning disability)” இதனைப் பற்றி ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் (தாரே ஜமீன் பர், பசங்க 2) வெளியிடப்பட்டிருந்தாலும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டவில்லை என்பதே உண்மை. கற்றல் குறைபாடுடன் இருக்கும் குழந்தைகள் துரு துரு வென ஓடி ஆடி விளையாடி அதீத ஆற்றலை வெளிப்படுத்துவர் பல சமயங்களில் அது பிறரைத் துன்புறுத்துவதாக அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் சமத்து குழந்தையாக தென்பட்டலும் பகல் கனவிலேயே காலத்தை ஓட்டுவர். “இது ஒரு நோய், தீர்க்கவே முடியாது” என்று நினைப்பது முட்டால்தனம். “இவன் அப்பா அஞ்சு வயசுல தான் பேசுனாரு இவனும் பேசீர்வான்” இது மூட நம்பிக்கை. இவர்களின் தேவை எல்லாம் “வித்தியாசமான கற்றல் முறை” மட்டுமே.

பாடத்தைப் பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்வது வழக்கமான முறை இவர்களைப் பொறுத்தமட்டில் பார்ப்பது கேட்பது மட்டுமல்லாமல்,தொட்டு, உணர்ந்து, உருவாக்கி, கேள்விகள் எழுப்பி, நடித்து, பாடி, வண்ணங்கள் தீட்டி ஒவ்வொன்றையும் தனக்கான பாணியில் கற்றுக்கொள்ள முற்படுவர். இவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே ஆனந்தம் தான். படிப்பைத் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிறப்பம்சம் இருக்கும் அதனைத் தட்டி எழுப்பி மெருகேற்றுவதில் தான் நம் வெற்றியே.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவரே. இந்த விதியின் அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது. இருப்பினும் கல்வியில் இத்தனை வஞ்சகம். பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்டனர் “பல நுண்ணறிவு(multiple intelligence)” என்னும் கோட்பாட்டை முன் வைத்தார். அதில் மொழியியல், கலையாற்றல், அறிவியல், கணிதாற்றல், சங்கீதம், இயற்கை, தசை இயக்க ஆற்றல் என ஏழு வகையாக ஆற்றல்களைப் பிரித்து முன்னிலைப் படுத்தினார். நம் அனைவருக்குள்ளும் இவை காணப்பட்டாலும் , ஆற்றலின் அளவு ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும்.
     ஒருவரின் திறமை பாட புத்தகத்தை             படித்துக் கக்குவதன் அடிப்படயில்                நிர்னயிக்கப் படுவது, குரங்கை                 நீந்துவதன் அடிப்படையிலும், மீனை           மரம் ஏறுவதன் அடிப்படையிலும்                திறனாய்வு செய்வதற்கு ஒப்பாகும்.

அவ்வாறு தான் இது நாள் வரை கல்வித் துறையில் நிகழ்ந்து வருகிறது.

பெற்றோர்களும் பேராசை கொள்ளாமல், தண்டமாக லட்சக் கணக்கில் காசு கட்டி கல்விக்கு விலை போகாமல், உங்கள் குழந்தையின் வலிமை எதுவென்று கண்டுபிடிக்க அவனுக்கு உதவி மட்டுமே செய்தால் போதும். ஸ்மார்ட் போர்டும் ,ரிமோட்டும் வைத்து நீங்கள் பாடம் நடத்தினாலும், இந்தியாவின் சாம்பியன்ஸ் ட்ராஃபி வெற்றியை செய்தித்தாளிலிருந்து வெட்டி ஒட்டுவதிலே தான் அவன் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறான்.